சீனாவில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்ற மகளையே ஆறு ஆண்டுகள்
வீட்டுக்குள்ளேயே பெற்றோர் சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர் சாங் குய் என்ற இளம்பெண். கடந்த
2009ம் ஆண்டு சாங் குய் இளைஞர் ஒருவரைக் காதலிப்பது அவரது பெற்றோருக்குத்
தெரிய வந்தது.
மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், சாங்கை
சுதந்திரமாக வெளியில் விட்டால் அவர் காதலனுடன் சென்று விடுவார் என
அஞ்சினர்.
காதலுக்கு எதிர்ப்பு... மகளை 6 வருடம் வீட்டுக்குள் சிறை வைத்து மன
நோயாளியாக்கிய கொடூர பெற்றோர்!
இதனால், அவர்கள் சாங்கை வீட்டுச் சிறையில் அடைத்தனர். அக்கம்பக்கத்தில்
உள்ளவர்கள் மகளை பற்றி கேட்ட போது, அவளுக்கு மனநிலை சரியில்லை, ஆகையால்
அவளைப் பாதுகாக்கவே தனியறையில் அடைத்து வைத்துள்ளதாக மழுப்பி வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சாங்கின் நிலையை சோ ஜென் என்ற 50
முதியவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். சாங்கைப் பெற்றோர் வீட்டுச்
சிறையில் அடைத்திருப்பது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும், பரிதாபகரமான நிலையில் சாங் படுத்திருப்பது போன்ற புகைப்படங்களை
அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சோ ஜென் கூறுகையில், ‘அப்பெண்ணின் பெற்றோர் மிகவும் சக்தி
வாய்ந்தவர்கள். ஆகையால் அங்குள்ள யாரும் இவ்விவகாரத்தில் தலையிடக்கூடாது என
மிரட்டப்பட்டனர்.
அப்பெண் வீட்டிற்குள் இருப்பது பல காலமாகவே அனைவருக்கும் தெரியும். நான்
வெளியூரில் வசிக்கிறேன். எப்போதாவது தான் இங்கு வருவேன். எனவே யாருடையை
மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன்.
ஒவ்வொரு புது வருடத்தன்றும் அப்பெண்ணை
நான் ரகசியமாக சந்திப்பேன்.
அவ்வாறு சமீபத்தில் அப்பெண்ணை நான் சந்தித்த போது, எனது கண்கள் குளமானது.
வைக்கோல் பொதிகளுக்கு நடுவே போர்வையால் சுற்றப்பட்டு அவள் படுக்கையில்
கிடந்தாள். அவளை சுற்றி உணவு சிதறிக்கிடந்தது. அப்போது தான் அவள்
துன்பப்பட்டது எல்லாம் போதும் என்று நினைத்தேன்.
அப்பெண்ணின் நிலையை
புகைப்படமாக எடுத்தேன். பெரும் வருத்தத்தில் இருந்த நான் போலீசாரிடம் இது
குறித்து புகார் அளித்தேன். பின்னர் அப்புகைப்படங்களை ஆன்-லைனில்
வெளியிட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.
பெற்றோரே இவ்வாறு மகளை வீட்டுக்குள் சிறை வைத்து கொடுமைப் படுத்திய சம்பவம்
சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.