மதுரை மாவட்டத்தில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் வெட்டியதில் முறைகேடு நடந்ததாக கடந்த 2011–ம் ஆண்டு மதுரை கலெக்டராக இருந்த சகாயம், தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தார். இதைத்தொடர்ந்து மதுரை கலெக்டராக இருந்த அன்சுல்மிஸ்ரா தலைமையில் தமிழக அரசு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இதையடுத்து மேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த பி.ஆர்.பி. கிரானைட், ஒலிம்பஸ் கிரானைட், சிந்து கிரானைட் உள்ளிட்ட 15–க்கும் மேற்பட்ட கிரானைட் நிறுவனங்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கிரானைட் அலுவலகங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன.
மேலும் கிரானைட் அதிபர்கள் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி மீதும் கிரானைட் முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் முன்ஜாமீன் பெற்றார். தற்போது கிரானைட் முறைகேடுகள் குறித்து மேலூர் கோர்ட்டில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் ‘டிராபிக்’ ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்ததையடுத்து மீண்டும் ஐகோர்ட்டில் அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் கடந்த 28–ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 4 நாட்களுக்குள் விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்.
இந்த விசாரணை முடியும் வரை சகாயத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். விசாரணைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்து வெளியிட்ட அறிக்கையில், கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு எந்த அச்சமும் இல்லை என்று கூறி இருந்தார். இதையடுத்து கடந்த 31–ந்தேதியிட்ட தமிழக அரசின் தலைமை செயலாளர் அலுவலக உத்தரவு மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் கனிம வளத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விசாரணைக்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன் நகல் சகாயத்திற்கும் அனுப்பப்பட்டது. கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழுவுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் அவர், விரைவில் மதுரை வந்து விசாரணையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மதுரை கலெக்டர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
அரசின் உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி விசாரணைக்குழுவுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம் என்றார்.
தற்போது அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் பதவியில் இருக்கும் சகாயம் விரைவில் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் ஐகோர்ட்டின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சகாயம் தனது விசாரணையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளார்.
இதற்காக மதுரையில் சில வாரம் முகாமிட்டு கிரானைட் முறைகேட்டில் நடந்த அனைத்து புள்ளி விவரங்கள் மற்றும் ஆவணங்களையும் திரட்டி முறைகேடு நடத்தப்பட்ட முழு விவரங்களையும் அறிக்கையாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய சகாயம் திட்டமிட்டுள்ளார்.