
உதகமண்டலம்: பேருந்து சென்றுகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டபோதும், பேருந்தை சாதுர்யமாக ஓரங்கட்டி நிறுத்திவிட்டு ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் உதகமண்டலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பேருந்து சுமார் 110 பயணிகளுடன் இன்று காலை உதகமண்டலம் நோக்கி மிகவும் பரபரப்பான மலைப்பாதை வழியாக வந்துக் கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் ஓட்டுனர் அப்துல் ரஹ்மான் என்பவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அவரால் பேருந்தை சரியாக ஓட்ட முடியவில்லை மேலும், பேருந்து அங்கும் இங்கும் தடம் மாறி சென்றது.
தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதை உணர்ந்த அப்துற்றஹ்மான், இனியும் பேருந்தை முன்நோக்கி ஓட்டிச் சென்றால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்துக் கொண்ட அப்துல் ரஹ்மான் நீலக்கோட்டை என்ற இடத்தில் சாலையின் பக்கவாட்டு சுவரின் மீது சக்கரத்தை ஏற்றி பேருந்தை ஓரங்கட்டி நிறுத்தினார். ஆபத்து நிறைந்த அந்த மலைப்பாதையில், வேகமாக ஓடும் பேருந்தை வெகு சாதுர்யமாக அப்துல் ரஹ்மான் ஓரங்கட்டி நிறுத்தியிருக்காவிட்டால், பக்கவாட்டில் உள்ள மிகப்பெரிய பாதாளத்தில் பேருந்து விழுந்திருக்கக் கூடும்.
பேருந்து நின்ற அதே வினாடி ஸ்டீரிங்கின் மீது அவர் சுருண்டு விழுந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த வாகனத்தில் அவரை ஏற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் ஓட்டிவந்த பேருந்தை பாதுகாப்பாக ஓரங்கட்டி 110 பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுனரின் கடமையுணர்வை அவரால் காப்பாற்றப்பட்டவர்கள் புகழ்கின்றனர்.
உயிரிழந்த பேருந்து ஓட்டுனர் அப்துல் ரஹ்மான்(45) கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தகக்து.