தமிழக புதிய டி.ஜி.பி.யாக அசோக்குமார் நியமனம் ராமானுஜம் தமிழக அரசின் ஆலோசகரானார்



தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக அசோக்குமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதுவரையில் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த கே.ராமானுஜம் தமிழக அரசின் ஆலோசகராக பொறுப்பு ஏற்கிறார்.

புதிய டி.ஜி.பி.அசோக் குமார்

தமிழ்நாட்டில் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக(டி.ஜி.பி) இருக்கும் கே.ராமானுஜம் இன்று(செவ்வாய்க்கிழமை) பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

அவருக்கு அடுத்து ‘சீனியாரிட்டி’யில் உள்ள அர்ச்சனா ராமசுந்தரம் தமிழக அரசின் ஒப்புதலை பெறாமல் மத்திய அரசு பணிக்கு சென்றார் என்ற காரணத்தால் தற்போது தமிழக அரசால் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.

அதற்கு அடுத்து அனுப் ஜெய்ஸ்வால், இரா.சேகர், கே.முத்துக்கருப்பன், அசோக்குமார் ஆகியோர் ‘சீனியாரிட்டி’யில் இருந்தனர். இவர்களில் அனுப் ஜெய்ஸ்வால், இரா.சேகர், அசோக்குமார் ஆகிய மூவரில் ஒருவர் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி கொண்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை புதிய டி.ஜி.பி.யாக அசோக்குமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்

அசோக்குமார் அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 15.6.1955-ல் பிறந்த அவர், 16.12.1982-ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக பதவியேற்றார். அவருக்கு அடுத்த ஆண்டு ஜூன் 15-ந்தேதி அன்று 60 வயது முடிந்தாலும், டி.ஜி.பி.யாக பணியாற்றுபவர் குறைந்தபட்சம் 2 வருடங்கள் அந்த பணியில் இருக்க வேண்டும் என்ற உத்தரவின்படி 2016-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி வரை அவர் பதவியில் இருக்க வாய்ப்பு உள்ளது. அசோக் குமார் தென்மண்டல சி.பி.ஐ. இணை இயக்குனராக திறம்பட பணியாற்றியவர்.

இதுவரையிலும் போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றிய கே.ராமானுஜம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவையும் தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

தமிழக அரசு உத்தரவு

இதுகுறித்து தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-

போலீஸ் டி.ஜி.பி. கே.ராமானுஜம் ஓய்வு பெறுகிறவேளையில், புதிய டி.ஜி.பி.யை நியமனம் செய்வதற்காக அதிகாரிகள் பட்டியலை தயாரிக்க இதற்கான குழு கூட்டத்தை கூட்டும்படி தமிழக அரசு மத்திய தேர்வாணைய குழுவுக்கு ஒரு கருத்தூரு அனுப்பியது.

இதன்படி, மத்திய தேர்வாணையக் குழு தனது பட்டியல் தயாரிக்க குழுவின் கூட்டத்தை கடந்த 27-ந்தேதி கூட்டி, டி.ஜி.பி. பதவிக்கான அதிகாரிகள் பட்டியல் தொடர்பான பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பியது. அந்த பட்டியலை தமிழக அரசு கவனத்துடன் பரிசீலித்தது. இதையடுத்து அசோக் குமார் தமிழக போலீஸ் டைரக்டர் ஜெனரலாகவும், போலீஸ் படை தலைவராகவும் நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இன்று பதவி ஏற்பு

சென்னை பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில், போலீஸ் டி.ஜி.பி. பதவியில் இருந்து ஓய்வு பெறும் கே.ராமானுஜத்துக்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் பிரிவு உபசார மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

புதிய டி.ஜி.பி.யாக அசோக் குமார் இன்று பதவி ஏற்பார் என்றும், அவருக்கு ஒய்வு பெற்ற டி.ஜி.பி.ராமானுஜம் பொறுப்புகளை ஒப்படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக அசோக்குமார் நியமிக்கப்பட்டதை அடுத்து நேற்றிரவு பத்திரிகையாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ‘நீங்கள் டி.ஜி.பி.யாக எப்போது பதவி ஏற்பீர்கள்? என்று கேட்டனர். அதுகுறித்து நாளை (இன்று) முடிவெடுப்பதாக அவர் தெரிவித்தார்.