திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அம்மையார்குப்பம் ஜி.எஸ்.துரைசாமி நகர் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் நேற்று 400-க்கும் மேற்பட்ட கடிதங்கள் கொட்டிக்கிடந்தன. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
குப்பையில் கிடந்த கடிதங்களில் ஆசிரியர் தேர்ச்சி தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’, பான்கார்டுகள், கல்லூரிகளில் இருந்து மாணவர்களுக்கு வந்த கடிதங்கள் உள்பட முக்கியமான பல கடிதங்கள் இருந்தன. இதை அறிந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
இதுபற்றி அறிந்த தபால் துறையினர், குப்பையில் கிடந்த கடிதங்களை எடுத்துச் செல்ல விரைந்து வந்தனர். ஆனால் பொதுமக்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய கடிதங்கள் குப்பை தொட்டிக்கு எப்படி வந்தது?. தபால்துறை மேல் அதிகாரி வந்து பார்க்கும் வரையில் அதை அப்புறப்படுத்தக்கூடாது என்று கூறி அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சுந்தரவேல், பொதுமக்களை அமைதிப்படுத்தி அந்த கடிதங்களை பத்திரமாக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கொண்டு செல்லலாம் என்று கூறி அக்கடிதங்களை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.
பொதுமக்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய கடிதங்களை அலட்சியமாக குப்பை தொட்டியில் வீசிய செய்தியை அறிந்த திருத்தணி கோட்ட தபால்துறை ஆய்வாளர் முருகேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அம்மையார்குப்பம் கிராமத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் இந்த சம்பவத்திற்கு காரணமான அப்பகுதி தபால்காரர் கார்த்திகேயன் என்பவரை ஆய்வாளர் முருகேஸ்வரி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.