
தனக்கு நிர்வாணமாக நடந்து திரிய உரிமை உண்டு என்று வாதாடி பல முறை அது போலத் திரிந்து, தடுத்து வைக்கப்பட்டு பல ஆண்டுகாலம் சிறைகளில் கழித்த பிரித்தானியர் ஒருவர் கொண்டுவந்த வழக்கை ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
ஸ்டீபன் கோவ் என்ற இவர் பொது இடங்களில் நிர்வாணமாக திரிந்ததற்காக கடந்த 11 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். சில முறை அவர் சிறையில் இருந்து வெளியேறிய உடனேயே மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தனது கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க இது போன்ற கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் புகார் செய்தார்.
நீதிமன்றம் அவர் இது போன்ற ஒரு சிறிய குற்றத்துக்காக அவர் அனுபவிக்க நேர்ந்த சிறைத்தண்டனை காலம் குறித்து கவலைப்பட்டது. ஆனால் அவர் மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டு சட்டத்தையும் மீறுகிறார் என்பதை அவர் தெரிந்தே வைத்திருந்தார் என்று அது கூறியது.