டெல்லி சட்டப்பேரவையைக் கலைக்கக் கோரி ஆம் ஆத்மி சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, டெல்லியில் புதிய அரசு அமைப்பது குறித்து மத்திய அரசு தாமதம் செய்வது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, டெல்லியில் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவரின் அனுமதி கிடைத்திருப்பதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் நரசிம்மன் தெரிவித்தார்.
இதற்கு ஆம் ஆத்மி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த தகவலை அடுத்து, இந்த முடிவு ஏன் முன்னரே எடுக்கப்படவில்லை என்றும், மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீண்ட நாட்களுக்கு நடைமுறையில் வைக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கூறியுள்ளது.