கீழ் தளத்தில் 4 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். முதல் மற்றும் 2–வது மாடி 15 ஆண்டுக்கு முன்பு திருமண மண்டபமாக இருந்தது. சுவரில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் ஒழுகியதால் அதனை உத்தம்சந்த் காலியாக வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் 2–வது மாடியின் மேல் தளம் இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகள் முதல் மாடியின் தளத்தில் விழ அதுவும் இடிந்தது, இரண்டு மாடி கட்டிட இடிபாடுகளும் கீழ் தளத்தில் மேல் கிடந்தது. இதனால் பயங்கர சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டு வெளியே வந்த உத்தம்சந்த் கட்டிடம் இடிந்ததை பார்த்து உறவினர்களை எழுப்பி வெளியே ஓடி வந்தார். இடிந்த கட்டிடத்தின் வலது பக்கத்தில் சுரேஷ் என்பவரின் வீடு உள்ளது. இடிபாடுகள் அவரது வீட்டிலும் விழுந்தது. தூங்கி கொண்டிருந்த சுரேஷ் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார். ஏதோ விபரீதம் நடந்ததை உணர்ந்து அவர் மனைவி தாட்சாயிணி, தாய் திரிபுர சுந்தரி, மகன்கள் கிஷோர்குமார், பிரதியுஷ், சத்யா, முருகேசன், தம்பி மகேஷ், அவரது மனைவி தேவி ஆகியோரை எழுப்பி வெளியே அழைத்து வந்தார். அங்கு பக்கத்து கட்டிடம் இடிந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 14 பேரும் இடிபாடுகளில் சிக்காமல் உயிர் தப்பினர்.
இதுபற்றி தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 10 வண்டிகளில் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கட்டிடத்துக்குள் யாராவது சிக்கி இருக்கிறார்களா என்று சோதனை செய்தனர். அதிர்ஷ்டவசமாக யாரும் சிக்கவில்லை. அதன்பின் ரோட்டில் கிடந்த இடிபாடுகளை அகற்றினர்.
சேதமடைந்த உத்தம்சந்தின் கட்டிடத்தில் வாடகைக்கு ஹார்டுவேர் கடை நடத்தும் சுந்தரம் என்பவர் கடை முன்பு தனது காரை நிறுத்தி இருந்தார். அதில் இடிபாடுகள் விழுந்து சேதம் அடைந்தது. சுப்பிரமணியன் என்ற தொழிலாளியின் மீன்பாடி வண்டியும் சேதம் அடைந்தது. கட்டிடத்தின் இடதுபுறத்தில் காலியாக இருந்த 5 மாத கட்டிடத்திலும் சேதம் ஏற்பட்டது.
விபத்து குறித்து அறிந்ததும் அமைச்சர் கோகுல இந்திரா சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.
பழமையான கட்டித்தை இடிக்காமல் வைத்து இருந்தது பற்றி உத்தம்சந்த் கூறுகையில், இந்த கட்டிடம் எனது தாத்தா காலத்தில் கட்டப்பட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக இடித்து கட்ட முடியாமல் இருந்தது என்றார்.
விபத்து குறித்து சுரேஷ் கூறுகையில், முதலில் இடி விழுந்தது போல் சத்தம் கேட்டது. 2–வது முறை நில அதிர்வு போல் உணர்வு ஏற்பட்டது. உடனே குடும்பத்தினரை எழுப்பி வெளியே அழைத்து வந்தேன். நாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம் என்றார்.
சுரேசின் வீட்டுக்குள் அவரது குடும்பத்தினர் செல்ல தீயணைப்பு துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் அவர் அரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். தீயணைப்பு படையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை நகரில் இதுபோன்ற பழமையான கட்டிடங்கள் பல உள்ளன. தற்போது இடிந்து விழுந்த கட்டிடம் இருக்கும் சாலையிலேயே 4 பழமையான கட்டிடம் இருக்கிறது.
எனவே இதுபற்றி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.