பயணிகளை நோகடிப்பது ஏன்? -ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!






புதுடெல்லி: ஏன் .., இந்த விமானத்தில் ஏறினோம்?’ என்று பயணிகள் நொந்துக் கொள்ளும் அளவுக்குவிமான சேவைகளின் தரம் படுமோசமாக இருப்பது, குறித்து ஏர்-இந்தியா விமான சேவைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை வைத்துள்ளது.

"லாபகரமான வழித்தடங்களை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு, நஷ்டம் வரக்கூடிய வழித்தடங்களில் மட்டும் ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குவது ஏன்?


விமான நிலையங்களில் தனியார் விமானங்கள் தரையிறங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவை இறங்கி முடிக்கும்வரை, வீணாக எரிபொருளை செலவழித்து வானத்தில் வட்டமிட்டு சுற்றுமாறு அரசுக்கு சொந்தமான விமானங்கள் நிர்ப்பந்திக்கப்படுவது ஏன்?

மற்ற நிறுவனங்களின் விமானங்களில் பயணித்தவர்கள், புதிதாக ஏர் இந்தியாவில் பயணிக்கும் போது, ‘ஏன் .., இந்த விமானத்தில் ஏறினோம்?’ என்று நொந்துக் கொள்ளும் அளவுக்கு விமான சேவைகளின் தரமும் படுமோசமாக இருப்பது, மிகவும் வருந்தத்தக்கது.

ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கி வருவதுடன், வாடிக்கையாளர்களின் அதிருப்தியையும் சந்தித்துவரும் ஏர் இந்தியா அழிந்துவிடக் கூடும். இந்த நிலையை மாற்ற நாம் முன்வர வேண்டும்" என்று மத்திய அரசுக்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கிவந்த இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் உள்நாட்டு விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை இணைப்பதற்கு இசைவு தெரிவித்து, தர்மாதிகாரி ஆணையம் அளித்த பரிந்துரைக்கு, இந்நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளது.