லாஸ் ஏஞ்சல்ஸ்,அக்.30 (டி.என்.எஸ்) லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானத்தில் வைஃபை இணைப்பை பயன்படுத்த முயன்ற பயணி ஒருவரின் மொபைலில் 'அல்-கொய்தா தீவிரவாத நெட்வொர்க்' என இணைப்பின் பெயர் தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பயணி உடனடியாக இத்தகவலை விமான பணிப்பெண்ணிடம் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகளின் பாதுகாப்பு கருதி, அந்த விமானம் 17 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகளில் சிலர் விடுதிகளில் தங்கவைப்பட்ட நிலையில், சிலர் அடுத்த விமானத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர். விமான தாமதத்திற்கான சரியான காரணத்தை தெரிவிக்காத விமான ஊழியர்கள் மீது கோபமடைந்த பயணிகள், தங்களின் ஆத்திரத்தை சமூக வலை தளங்கள் வாயிலாக பகிர்ந்துகொண்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பயணி ஒருவர், 'இதை செய்த முட்டாளுக்கு நன்றி. என்னால் லண்டனுக்கு ஒரு நாள் கழித்து தான் செல்ல முடியும்' என வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
விமானம் தாமதமாக புறப்பட்டதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க விமான நிறுவனம், 'விமானம் தாமதமானதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம், ஒரு பயணி இதுகுறித்து கவலை தெரிவித்திருந்தார். நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதால் விமானம் தாமதமானது' எனத் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அமெரிக்க விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஏ.பி.சி. 7 நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 'தீவிர விசாரணைக்கு பின், எவ்வித குற்றமும் நடைபெறவில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இனி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது' எனத் தெரிவித்தார்.