படேல் சிலை கட்டுமானப் பணிக்கு எல் அண்ட் டி நிறுவனம் தேர்வு

குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் கட்டப்பட இருக்கும் 'ஒற்றுமைக்கான சிலை' அமைப்புக்காக முன்மொழியப்பட்ட படம்: ஏ.எப்.பி. குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் கட்டப்பட இருக்கும் 'ஒற்றுமைக்கான சிலை' அமைப்புக்காக முன்மொழியப்பட்ட படம்

சர்தார் வல்லபாய் படேலுக்கான சிலை அமைக்கும் கட்டுமான ஒப்பந்தம் எல் அண்ட் டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உலகிலேயே மிகப் பெரிய அளவில் 'ஒற்றுமைகான சிலை' என்ற பெயரில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை நர்மதா மாவட்டத்தில் நிறுவப்படுகிறது.
182 மீட்டர் உயரத்துக்கு அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலைக்கு நிகராக அமைக்கப்பட உள்ள இந்த சிலைக்கு ரூ. 2,979 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை அமைப்பதற்கான கட்டுமான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில், இதற்கான ஒப்பந்தம் பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி-யின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட இந்த சிலை திட்டத்துக்கான ஒப்புதல் ஒப்பந்தத்தை அம்மாநில முதல்வர் ஆனந்தி படேல் திங்கட்கிழமை அன்று வழங்கினார்.
இதற்கான துவக்க விழாவில் பேசிய அவர், "சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை சுற்றிலும் அமைக்கப்பட உள்ள கண்காட்சி மண்டபம், வரலாற்று சிறப்புகளை பறப்புவதற்கான ஒலி-ஒளி திரைக்கூடம் அனைத்தும் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும்" என்றார்.
'ஒற்றுமைகான சிலை' கட்டுமான வழிகாட்டுதல் நடவடிக்கைகளை 'டர்னர்' கட்டுமான நிறுவனம் மேற்கொள்கிறது. 'டர்னர்' நிறுவனம் உலகிலேயே மனித உழைப்பினாலான மிகப் பெரிய கட்டிடமான 'பூர்ஜ் கலீஃபா' கட்டிட வடிவமைப்பை மேற்கொண்ட நிறுவனமாகும்.