வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
புதுடெல்லி,
சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த வக்கீலான ராம்ஜெத் மலானி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட கமிட்டி ஒன்றை அமைத்து விசாரித்து வருகிறது.
3 தொழில் அதிபர்கள்
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் 16 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்திய தொழில் அதிபர்கள் 3 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது.
தாபர் இந்தியா குழுமத்தின் முன்னாள் இயக்குனரான பிரதீப் பர்மன், கோவாவைச் சேர்ந்த சுரங்க நிறுவன அதிபரான ராதா சதீஷ் டிம்லோ, குஜராத்தைச் சேர்ந்த பிரபல தங்க வியாபாரி சிமன்லால் லோதியா ஆகியோருடைய பெயர்கள் அதில் இடம்பெற்று இருந்தன. மேலும் டிம்லோ சுரங்க நிறுவன இயக்குனர்கள் 4 பேர் பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளன. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.