திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு, விஷம் குடித்துவிட்டு வந்து மனு கொடுத்த தாய், மகள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விஷம் குடித்து வந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அம்மாபட்டி அருகே உள்ள கொட்டப்பட்டியை சேர்ந்தவர் வனஜா (வயது 38). இவருடைய கணவர் பாண்டியன் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவர்களுடைய மகள் பிரவீனா (13) 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இவர்களை, வனஜாவின் மாமனாரும், மாமியாரும் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மனு கொடுக்க தாய், மகள் 2 பேரும் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, வனஜாவும், பிரவீனாவும் தாங்கள் ஏற்கனவே விஷம் குடித்துவிட்டு வந்ததாக கூறினர். இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே வனஜாவும், அவருடைய மகள் பிரவீனாவும் பரிதாபமாக இறந்தனர்.
மாமனார், மாமியார் மீது புகார்
வனஜா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்திருந்த புகாரில், ‘என்னுடைய கணவர் பெயரில் 3½ ஏக்கர் நிலம் உள்ளது. அவர் இறந்துவிட்டதால், அந்த நிலத்தை எங்களை பயன்படுத்த விடாமல் என்னுடைய மாமனார் மற்றும் மாமியார் அபகரித்துவிட்டனர். மேலும், என்னையும், மகளையும் அவர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மாமனார், மாமியார் மீது புகார் கொடுக்க போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு, விஷம் குடித்து வந்த தாய், மகள் பரிதாபமாக இறந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் கன்னிவாடி போலீசாருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.