தேசியச் செய்திகள் 2 ஜி முறைகேடு தொடர்பான வழக்கு: தயாளு அம்மாளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


2 ஜி முறைகேடு விவகாரத்தில், கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக 200 கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.


தயாளு அம்மாளை விடுவிக்கக் கோரி, அவரது மகள் செல்வி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மனு தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. செல்வி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரண், தயாளு அம்மாளுக்கு ஞாபகமறதி உள்ளிட்ட நோய்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

எனவே, இந்த வழக்கு பற்றி விவரங்கள் அவருக்கு தெரியாது எனவும் வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 2 ஜி அலைக்கற்றை உரிமத்திற்காக, சில தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் தொகையை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது.

இதுதொடர்பாக, விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.