பிணைக்கைதிகள் போன்ற நிலையில் இருக்கிறோம்: ஈராக்கிலுள்ள இந்தியர்கள் அலறல்

ஈராக்கில் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கேரளாவை சேர்ந்த மெரினா ஜோஸ் உள்ளிட்ட 45 நர்சுகள் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் அந்நாட்டு ராணுவத்தின் மீது சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த வாரம் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய அவர்கள் திக்ரித் நகரையும் கைப்பற்றினர். இதனால் அங்குள்ள நமது நாட்டை சேர்ந்த நர்சுகளின் நிலை கேள்விக்குறியானது. அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மெரினா ஜோஸ் தாங்கள் பிணைக்கைதிகள் போன்ற நிலையில் உள்ளதாக கூறியுள்ளார். தாங்கள் சிறையிலடைக்கப்பட்டது போன்ற நிலையில் இருப்பதாக அவர் மிரட்சியுடன் கூறியுள்ளார். ஈராக்கை சேர்ந்த அரசு ஊழியர்களோ, ராணுவத்தினரோ இங்கு இல்லை என்று தெரிவித்த அவர், தங்கள் குடும்பத்தினரை கூட தங்களால் தொடர்புகொள்ள இயலாமல் தவித்து வந்த நிலையில் செஞ்சிலுவை அமைப்பினர் தான் தங்கள் சிம்கார்டை ரீசார்ஜ் செய்ததாக கூறினார். அதன் பின் தங்கள் குடும்பத்தாரை தொடர்பு கொள்ள முடிந்ததாக சோகத்துடன் கூறினார்.

தங்கள் மகளுடன் பேசிய பின் மெரினாவின் தந்தை ஜோஸ், தாய் மரியம்மா, அவர்களுடைய பேரக்குழந்தை ரயா ஆகியோர் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள தங்கள் இல்லத்தில் பைபிளை வைத்துக்கொண்டு கிறிஸ்துவை வழிபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று நாமும் இறைவனை வேண்டுவோம்.