அபூர்வ பிரிட்டிஷ் கயனா தபால் தலை -- 9.5 மிலியன் டாலர்களுக்கு ஏலம்
ஒரு செண்ட் மதிப்பு கொண்ட தபால் தலையான இந்த "மஜெண்டா" என்ற தபால் தலை, பிரிட்டிஷ் கயனாவால் 1856ல் வெளியிடப்பட்டது.
பிரிட்டிஷ் காலனியாக இருந்த பிரிட்டிஷ் கயனாவால் அந்த ஆண்டு லண்டனிலிருந்து கப்பல் மூலம் அனுப்பப்படும் தபால் தலைகள் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உள்ளூரிலேயே இந்தத் தபால் தலை அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதனுடன் வேறு சில தபால் தலைகளும் வெளியிடப்பட்டன.
அபூர்வ தபால் தலைகளை சேகரிப்பதில் நாட்டம் கொண்டவர்கள் மிகவும் விரும்பித் தேடிக்கொண்டிருக்கும் தபால் தலை இதுவாகும்.
இந்த ஒரே ஒரு தபால்தலைதான் அந்த ஆண்டு அச்சிடப்பட்ட பிரிட்டிஷ் கயனா தபால் தலைகளில் எஞ்சியிருப்பதாகக் கருதப்படுகிறது.
மிகவும் சிறிய, எண் முக வடிவமுள்ள இந்த தபால் தலையில் மூன்று கம்பங்கள் கொண்ட கப்பலின் படம் கறுப்பு நிறத்தில் மஜெந்தா தாளில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் கயனாவின் கொள்கைப்பிரகடனமான, "நாங்கள் கொடுக்கிறோம், பதிலுக்கு தருவதையும் எதிர்பார்க்கிறோம்" என்ற வாசகங்கள் லத்தீனில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இதன் முதல் உரிமையாளர் ஒரு 12 வயது ஸ்காட்லாந்துப் பையன். அவர் இந்த தபால்தலையை 1873ல் குடும்ப ஆவணங்களிலிருந்து கண்டெடுத்திருந்தார்.
1986லிலிருந்து வெளிப்பார்வைக்கு வராத இந்தத் தபால் தலை பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் தனிப்பட்ட தபால் தலை சேமிப்பில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| | |