கடத்தப்பட்டவர்களில் ஒரு இந்தியர் கொலை?: 38 பேர் இருப்பிடம் தெரியவில்லை

பாக்தாத், ஜூன். 23–

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த இரு வாரங்களாக ராணுவ நிலைகள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள்.

கடத்தப்பட்டவர்களில் ஒரு இந்தியர் கொலை?: 38 பேர் இருப்பிடம் தெரியவில்லைஈராக்கில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் 129 பேர் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் சிக்கிக் கொண்டனர். இதில் 46 பேர் நர்சுகள், 39 பேர் கட்டுமான தொழிலாளர்கள் மற்றவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவார்கள்.
இவர்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 46 நர்சுகள் மொசூல் நகரில் பத்திரமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 கட்டுமான தொழிலாளர்கள் நிலைதான் மத்திய வெளியுறவுத்துறைக்கு கடும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதிகள் பிடியில் உள்ள 39 இந்திய தொழிலாளர்களும் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மொசூல் புறநகரில் உள்ள ஒரு பஞ்சாலையிலும், அரசுக் கட்டிடத்திலும் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் நேற்று அவர்களை அங்கிருந்து வேறு இடத்துக்கு தீவிரவாதிகள் இடமாற்றம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடத்தப்பட்ட 3 இந்திய கட்டுமானத் தொழிலாளர்களில் ஒரு வரை தீவிரவாதிகள் சுட்டு கொன்று விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை.
கொல்லப்பட்ட இந்தியர் மேற்கு வங்கத்தை சேர்ந்த 4 தொழிலாளர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியாகவில்லை.
ஈராக்கில் உள்ள ஒரு இந்தியர் மூலம் இந்த தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இதுவரை இந்த தகவலை உறுதி செய்யவில்லை.
தற்போது 39 இந்திய தொழிலாளர்களும் மொசூல் புறநகரில் இருக்கிறார்களா? அல்லது வேறு எங்காவது அழைத்து செல்லப்பட்டுள்ளார்களா? என்று தெரியவில்லை. அவர்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் செம்பிறை சங்கத்தின் உதவிகளை இந்திய அதிகாரிகள் நாடியுள்ளனர். இதற்கிடையே ஈராக்கில் சில அதிகாரிகள், ‘‘கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர். அவர்களை பிடித்து வைத்துள்ள குழு பற்றி அடையாளம் மற்றும் தகவல்கள் கிடைத்துள்ளது’’ என்று கூறியுள்ளனர்.
கடத்தப்பட்ட 39 இந்திய தொழிலாளர்களையும் போர் முனையில் மனித கேடயமாக பயன்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பு அவர்களை மீட்டு விட வேண்டும் என்று அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகிறார்கள்.
ஈராக்கில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களை இலவசமாக அழைத்து வர மத்திய அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதற்காக ஈராக்கில் உள்ள இந்தியர்களிடம் தொடர்பு கொண்டு பேசப்பட்டது.
அப்போது வட மாநிலங்களை சேர்ந்த 121 இந்திய வாலிபர்கள் சட்ட விரோதமாக ஈராக்கில் இருப்பது தெரிய வந்தது. தபாய் நாட்டுக்கு விசிட்டர் விசா மூலம் சென்ற அவர்கள் பிறகு சட்ட விரோதமாக ஈராக் நாட்டுக்குள் சென்று அங்கு தங்கி இருந்து வேலை பார்த்து வருவது தெரிந்தது. இவர்களை மீட்கவும் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகிறார்கள்.