சென்னை, ஜூன் 14–
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற பள்ளி– கல்லூரிகளின் பெயர்களில் மதிப்பெண்பட்டியல், சான்றிதழ்கள் போலியாக தயார் செய்து ஒரு கும்பல் விற்பனை செய்வதாக உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை மையமாக வைத்து கமிஷனர் ஜார்ஜ் போலீசாரை உஷார்படுத்தி துப்பு துலக்க உத்தரவிட்டார்.
இதன் முதற்கட்டமாக போலி சான்றிதழ் தயாரித்து கைதாகி சிறையில் இருப்பவர்கள் மற்றும் விடுதலையானவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இதில் கிடைத்த தகவலை வைத்து, வண்ணாரப்பேட்டை குருவப்பா தெருவில் வாடகைக்கு தங்கி இருந்த கருணாகரன் (43) என்பவரை பிடிக்க சென்றனர். ஆனால் அவர் அந்த வீட்டை காலி செய்து விட்டு அதே பகுதியில் நாகு என்பவரது வீட்டில் வாடகைக்கு இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது வீடு பூட்டி கிடந்தது. இதனால் வீட்டு உரிமையாளர் முன்னிலையில் கருணாகரன் தங்கியிருந்த அறையின் பூட்டை போலீசார் உடைத்தனர்.
அந்த வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது அண்ணா பல்கலைகழக சான்றிதழ், சென்னை பல்கலைகழக சான்றிதழ் மற்றும் தனியார் பல்கலைகழக சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்கள் போலி ரப்பர் ஸ்டாம்புகள் கம்ப்யூட்டர்கள், இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து கருணாகரனை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் மூர்த்தி, தேவராஜ் ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். இவர்கள் பட்டாளம், வியாசர் பாடியை சேர்ந்தவர்கள்.
தேவராஜ் பிடிபடும் போது அவரிடம் போலி மதிப்பெண் பட்டியல்கள், போலியான வக்கீல் விசிட்டிங் கார்டு இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் இவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தியதில் கருணாகரன் பர்மாவில் இருந்து அகதியாக வந்து பெரம்பூர் அகரம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தது தெரிய வந்தது.
ஓட்டேரியை சேர்ந்த ராஜ மாணிக்கம் என்பவருடன் சேர்ந்து கருணாகரன் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக 10 ஆண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என தெரிந்தது.
கடந்த 2001–ம் ஆண்டு போலியான மதிப்பெண் பட்டியல்கள் தயார் செய்ததாக கருணாகரன் அவனது கூட்டாளி திருவொற்றியூர் கன்னியப்பன் ஆகியோர் புளியந்தோப்பு போலீசாரிடம் பிடிபட்டனர்.
அதன்பிறகு ஜாமீனில் வந்த இருவரும் 9 வருடமாக தலைமறைவாக இருந்து போலி சான்றிதழ் விற்பனையை அமோகமாக நடத்தி வந்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, பாலிடெக்னிக் என்ஜினீயரிங், பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல்கள், கல்வி சான்றிதழ்கள் தயார் செய்து விற்பனை செய்ததுடன் அரசு அலுவலகங்களின் சான்றிதழ்கள், ஜாதி சான்று, வருமான சான்று என பல்வேறு வகை சான்றிதழ்களை கம்ப்யூட்டரில் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.
படிப்பு சான்றிதழ்களை ரூ.1500 முதல் 2500 வரை இஷ்டத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
கடந்த 9 வருடங்களில் இவர்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமான சான்றிதழ்களை விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் அதிகம் பேர் இவர்களிடம் சான்றிதழ் வாங்கிச் சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்று வேலையில் சேர்ந்தவர்கள் யார்–யார்? என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், போலி ஜாதி சான்றிதழ் பெற்று அரசு வேலை மற்றும் படிப்புகளில் சேர்ந்தவர்கள் யார் யார் உள்ளனர் என்றும் விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ளவர்களுக்கும் இவர்கள் போலி சான்றிதழ்களை விற்பனை செய்துள்ளதால் இதுபற்றி பெரிய அளவில் விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
போலீசாரிடம் பிடிபட்ட கருணாகரன், மூர்த்தி, தேவராஜ் ஆகியோர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டாலும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட உள்ளனர்.
குற்றவாளிகளுக்கு தரகர்களாக செயல்பட்ட கன்னியப்பன், ராஜேஷ், ராஜேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்ய போலீஸ் படை முடுக்கி விடப்பட்டுள்ளது.