ISIS இன் பிடியில் இருந்த அமெரிக்கப் பெண்மணி கைலா ஜீன் முல்லர் கொலை உறுதியானது!

சிரியாவில் ISIS போராளிக் குழுவால் கடந்த 1 1/2 வருடங்களாகப் பிணைக் கைதியாகப் பிடித்து வைக்கப் பட்டிருந்த 26 வயதாகும் அமெரிக்காவின் தொண்டு நிறுவன ஊழியரான கைலா ஜீன் முல்லர் என்ற பெண்மணி சமீபத்தில் கொல்லப் பட்டுள்ளார் என்பதை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் முல்லரின் குடும்பத்தினரும் உறுதிப் படுத்தியுள்ளனர்.





மேலும் இத்தகவலை அறிந்து தமது இதயம் சுக்கு நூறாக உடைந்து விட்டதாகவும் மிக இளம் வயதில் தனது உயிரை உலகில் சுதந்திரம், நீதி மற்றும் சமாதானம் என்பவை தேவைப் படும் மக்களுக்காகத் தமது மகள் அளித்துள்ளார் எனவும் முல்லரின் குடும்பத்தினர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர். முன்னர் வெள்ளிக்கிழமை கைலா ஜீன் முல்லர் ரக்கா நகரில் ஜோர்டானின் விமானத் தாக்குதலிலேயே கொல்லப் பட்டார் என ISIS தெரிவித்திருந்த போதும் அதற்கான சான்றை தெரியப் படுத்தவில்லை. 

இந்நிலையில் கடந்த வார இறுதியில் முல்லரின் குடும்பத்துக்கு ISIS அனுப்பியிருந்த தனிப்பட்ட செய்தியில் அவர் கொல்லப் பட்டு விட்டார் என அறிவித்து இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் அவர் எப்போது எப்படி கொல்லப் பட்டார் என்பது அறிவிக்கப் படவில்லை. ஆனால் இத்தகவலை அதிபர் ஒபாமாவும் உறுதிப் படுத்தியிருப்பதுடன் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் கைலா ஜீன் முல்லரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதேவேளை கடந்த வருடம் முல்லர் பிணைக் கைதியாகக் கைப்பற்றப் பட்ட பின் தனது குடும்பத்தினருக்கு சிரியாவில் இருந்து வரைந்த கடிதத்தை அவரது உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். அதில் கைலா ஜீன் முல்லர் தான் பிணைக் கைதியாகப் பிடித்து வைக்கப் பட்டுள்ளதைத் தெரியப் படுத்தியுள்ளதுடன் மேலும் தான் பாதுகாப்பான ஓரிடத்தில் தங்க வைக்கப் பட்டிருப்பதாகவும் தன்னை யாரும் எக்காரணத்துக்காகவும் துன்புறுத்தவில்லை எனவும் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தான் மிக மரியாதையாகவும் அன்பாகவும் கவனிக்கப் பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கைலா ஜீன் முல்லர் இந்தியா, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்பதுடன் எயிட்ஸ் நோய் சிகிச்சை மையங்கள் மற்றும் அரிஷோனாவிலுள்ள மகளிர் புகலிடம் ஒன்றிலும் பணியாற்றி உள்ளார்.