போபால் விஷவாயு சாவுக்கு காரணமான யூனியன் கார்பைடு கம்பெனி அதிபர் ஆண்டர்சன் மரணம் அடைந்தார். கடந்த 1984–ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற் சாலையில் இருந்து விஷ வாயு வெளியேறி பல ஆயிரக் கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இதில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் இன்னும் ஊனத்துடன் வாழ்கிறார்கள்.
இந்த சாவுக்கு காரணமான யூனியன் கார்பைடு தொழிற்சாலை அமெரிக்காவைச் சேர்ந்தது. இதன் தலைவராக வாரன் ஆண்டர்சன் இருந்தார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் ஆண்டர்சன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி நடந்தது. அது பயன் அளிக்காததால் தண்டனையில் இருந்து தப்பி வந்தார்.
இந்த நிலையில் 92 வயதான ஆண்டர்சன் முதுமை காரணமாக உடல் நலம் குன்றி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.