அணு ஆயுதப்பரவல் தடை உடன்படிக்கை தொடர்பான ஐ.நா. சபை தீர்மானத்துக்கு எதிராக இந்தியா ஓட்டு

அணு ஆயுதப்பரவல் தடை உடன்படிக்கை தொடர்பான ஐ.நா. சபை தீர்மானத்துக்கு எதிராக இந்தியா ஓட்டுஅணு ஆயுதப்பரவல் தடை உடன்படிக்கை தொடர்பான ஐ.நா. சபையின் வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா ஓட்டு போட்டது. அணு ஆயுதப்பரவல் தடை உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடவில்லை. இந்த நிலையில், 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள ஐ.நா. பொதுச்சபையில் ஆயுதங்களை கைவிடல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விஷயங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்பேற்றுள்ள முதல் குழு நேற்று முன்தினம் ஒரு வரைவு தீர்மானத்தை கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்தில், உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளும் அணு ஆயுதப்பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. ஆனால் ஏற்கனவே இந்தியா இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்து விட்ட நிலையில், இப்போதும் தனது முந்தையை நிலையை உறுதி செய்கிற வகையில், ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக இந்தியா ஓட்டு போட்டது.

இந்தியாவை போன்று வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளும் ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்டன. இருப்பினும் இந்த தீர்மானம் நிறைவேறியது.

தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது குறித்து இந்தியா கூறியதாவது:-

அணு ஆயுதப்பரவல் தடை உடன்படிக்கையை பொறுத்தமட்டில் இந்தியாவின் நிலை என்ன என்பது எல்லோருக்கும் நன்றாக தெரிந்த ஒன்றுதான். அணு ஆயுதம் இல்லாத நாடாக அணு ஆயுதப்பரவல் தடை உடன்படிக்கையில் இந்தியா சேரும் கேள்விக்கே இடமில்லை. இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் அணு ஆயுதம் என்பது ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இந்த நிலையே தொடரும்.

அதே நேரத்தில் அணு ஆயுதங்களால் மனித சமூகத்துக்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல், பயன்படுத்தும் அபாயம் இந்தியாவுக்கும் கவலை அளிக்கிறது. அணு ஆயுதத்தை கைவிட வேண்டும், அணு ஆயுதப்பரவல் கூடாது என்ற கருத்தை இந்தியாவும் பகிர்ந்துகொள்கிறது.