குர்ஆனை அவமதித்த கிறிஸ்தவ தம்பதியினர் உயிருடன் எரித்துக் கொலை





பாகிஸ்தானில் குர்ஆனை எரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தம்பதியினரை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கசூர்(Kasur) மாவட்டத்தில் உள்ள சக்(Sak) என்ற கிராமத்தில், சஹ்ஜாத் மசி-ஷமா(Shahzad Masih- Shama Bibi) என்ற கிறிஸ்துவ தம்பதியினர் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வந்துள்ளனர்.
இவரது உரிமையாளர் முஹம்மத் யூசுப் குஜ்ஜார்(Muhammad Yousuf Gujjar) என்பவர் இந்த தம்பதியருக்கு ஒழுங்காக கூலியை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இதனால் சஹ்ஜாத்திற்கு அவரது உரிமையாளர் முஹம்மத்துடன் வாக்குவாதம் நேர்ந்ததுடன், அத்தம்பதியினர் இஸ்லாமிய புனித நூலான குர்ஆனை தீயீட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்து கொந்தளித்த ஏராளமானவர்கள் உள்ளூர் மதத் தலைவரின் தலைமையில் முஹம்மத் யூசுப் குஜ்ஜாரின் செங்கல் சூளைக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து சஹ்ஜாத் மசியின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கும்பல் ஒன்று, அந்த தம்பதியினரை குடிசையை விட்டு வெளியே இழுத்து, அடித்தும் உதைத்தும் சித்ரவதை செய்துள்ளது.
அப்போது தங்கள் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் தங்களது உரிமையாளர் பழிவாங்கும் நோக்கில் இப்படி ஒரு கட்டுக்கதையை கட்டியுள்ளார் எனவும் கூறி கதறியுள்ளனர்.

ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த கும்பல், கொழுந்து விட்டு எரிந்த செங்கல் சூளை தீக்குள் உயிருடன் அத்தம்பதியினரை வீசியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் முழுவதும் பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக சுமார் 50 பேரை கைது செய்துள்ளதாகவும், தலைமறைவாக இருக்கும் முஹம்மத் யூசுப் குஜ்ஜாரை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.