பிரேசில் அதிபராக ரூசெஃப் மீண்டும் தேர்வு

மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியை கட்சியினருடன் பகிர்ந்து கொள்கிறார் தில்மா ரூசெஃப் | படம்: ஏஎப்பி மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியை கட்சியினருடன் பகிர்ந்து கொள்கிறார் தில்மா ரூசெஃப்.

பிரேசில் அதிபர் தேர்தலில் தற் போதைய அதிபர் தில்மா ரூசெஃப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் 90 சதவீத வாக்குகள் எண்ணப் பட்டுள்ள நிலையில், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தில்மா ரூசெஃப் 51.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரேசிலியன் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஏசியோ நெவல் 48.5 சதவீத வாக்குகள் பெற்றார்.
தொழிலாளர் கட்சி கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளது. இக்காலகட்டத்தில் மேற் கொண்ட நலத்திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான பிரேசில் மக்கள் வறுமையிலிருந்து மீண்டு நடுத்தர வர்க்கத்தினராக மேம்பட்டுள்ளனர். பிரேசில் ஜனநாயகப் பாதைக்கு கடந்த 1985-ம் ஆண்டு திரும்பியது. தேர்தலில் 1995-ம் ஆண்டு முதல் தொழிலாளர் கட்சிக்கும், பிரேசலியன் சமூக ஜனநாயகக் கட்சிக்கு மட்டுமே போட்டி நடந்து வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, அதிபர் தில்மா ரூசெஃப் மீது, “அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான பெட்ரொபிராஸில் ஊழல் நடைபெற்றதாகவும், அதில் தொழிலாளர் கட்சி நேரடியாக பயனடைந்ததாகவும்” ஏசியோ நெவல் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், அக்குற்றச்சாட்டுகளை மீறி தில்மா ரூசெஃப் வெற்றி பெற்றுள்ளார்.