ஆஸ்திரேலியாவில் கட்டப்பட்ட சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல்



ஆஸ்திரேலிய நாட்டில் பெர்த் நகரில், பென்னட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஒரு குருத்வாராவை (வழிபாட்டுத்தலம்), சீக்கியர்கள் கட்டி இருந்தனர். இந்த வழிபாட்டுத்தலத்துக்குள் நுழைந்த விஷமிகள், அதன் சுவர்களில் ‘ஆஸ்திரேலியாவுக்கு பெருமை’, ‘ உங்கள் நாட்டுக்கு திரும்பிச்செல்லுங்கள்’ என்று அர்த்தம் தொனிக்கிற வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி விட்டு, தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம், ஆஸ்திரேலியாவில் வாழ்கிற சீக்கிய மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்த குருத்வாராவின் மத குரு சத்ஜித் சிங் கூறியதாவது:

நாங்கள் இந்தியாவில் இருந்து, குறிப்பாக பஞ்சாபிலிருந்து இங்கு வந்தவர்கள். எங்களுக்கு பிற எந்த மதத்துடனும் தொடர்பு இல்லை. நாங்கள் சீக்கியர்கள். இந்த குருத்வாராவை சூறையாடி இருப்பது மிகுந்த வேதனையை தந்துள்ளது. இப்போது குருத்வாராவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வதற்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.30 லட்சம்) செலவாகும்.

இந்த தாக்குதல் சம்பவம், என்னை வெட்கி தலைகுனிய வைத்துள்ளது. ஏனெனில் நானும் (இந்த நாட்டின்) ஒரு குடிமகன். என்னைப்போன்ற ஒரு குடிமகன் தான் இதை செய்துள்ளார். இந்த சம்பவம், ஆஸ்திரேலிய சமுதாயத்தினருக்கும், மக்களுக்கும் ஒரு அவமதிப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த குருத்வாராவின் பொருளாளர் அமன் தீப் சிங், “இந்த தாக்குதல் சம்பவத்தை யார் செய்திருந்தாலும், அவர் வெட்கப்படும்படியான காரியத்தைத்தான் செய்துள்ளார். குருத்வாராவில் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் குருத்வாராவை மட்டும் சேதப்படுத்தவில்லை. ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய தேசத்தையும் சேதப்படுத்தி உள்ளனர்” என கூறினார்.

தொழிலாளர் கட்சி எம்.பி. மார்கரெட் குயிர்க், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “இந்த குருத்வாராவில் வழிபாடு நடத்தி வருகிறவர்கள் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியர்கள் தான். இந்த சம்பவம் உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. இதை ஏற்க முடியாது. மேற்கு ஆஸ்திரேலிய சமூகத்தின் சார்பில் சீக்கிய சமயத்தை சேர்ந்த எனது நண்பர்களிடம் இந்த சம்பவத்துக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.” என கூறினார்.