கால் தவறி விழுந்த தொழிலாளியால் சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு

குலசேகரம், ஜூன் 9–
திருவட்டார் அருகே செருப்பாலூரில் இருந்து மாத்தூர் தொட்டி பாலம் செல்லும் வழியில் குருசு பாறை உள்ளது. இந்த பகுதியில் உள்ள சானல் கரை ஓரத்தில் சாலை உள்ளது.
கால் தவறி விழுந்த தொழிலாளியால் சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு
இந்த சாலை வழியாக தாஸ் என்ற தொழிலாளி இன்று காலை ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சாலை ஓர மணலில் சென்ற போது திடீர் என்று அந்த இடத்தில் பள்ளம் உருவாகி அவர் அந்த பள்ளத்திற்குள் தவறி விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த தொழிலாளி தாஸ் கடும் போராட்டத்திற்கு பிறகு அந்த பள்ளத்தில் இருந்து எழுந்து வெளியே வந்தார். திடீர் என்று உருவான அந்த பள்ளம் சுமார் 10 அடி ஆழம் இருந்தது. அந்த பள்ளத்திற்குள் தாஸ் பார்த்த போது, சுரங்கபாதை போன்ற அமைப்பு இருந்தது தெரிய வந்தது.
உடனே அவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் இந்த சுரங்கபாதை பற்றி தகவல் தெரிவித்தார். இதனால் அங்கு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுரங்கபாதை எங்கு செல்கிறது? அதற்குள் புதையல் இருக்குமா? என்று பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களால் எழுப்பப்பட்டதால் பரபரப்பு அதிகரிக்க தொடங்கியது.
இதுபற்றி திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அந்த சுரங்க பாதை பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லாதபடி போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி தொல்பொருள் ஆய்வு துறைக்கு தகவல் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.