இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம்: மத்திய அரசு வேண்டுகோள்

புதுடெல்லி, ஜூன் 16-

ஈராக்கில் உள்நாட்டு போர் நடப்பதால் அந்த நாட்டுக்கு செல்வதை தவிர்க்கும்படி இந்தியர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத படையினருக்கும், அரசாங்க படையினருக்கும் இடையே கடுமையான போர் மூண்டுள்ளது.
இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம்: மத்திய அரசு வேண்டுகோள்

தற்போது தீவிரவாத படை சிறிது, சிறிதாக முன்னேறி சில நகரங்களை கைப்பற்றியுள்ளது. அவர்கள் பாக்தாத் நகரின் வடக்கு பகுதியை நோக்கி முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் 70 லட்சம் மக்கள் வசிக்கும் அந்த நகரில் அரசு தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கடுமையாக செய்யப்பட்டு உள்ளது.

தீவிரவாதிகள் பாக்தாத் நகரத்தை நோக்கி முன்னேறி கொண்டிருப்பதால் அங்கு உணவு பொருட்களின் விலைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் கடுமையாக அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். பாக்தாத் நகரிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்தியர்கள் பலர் வசிக்கின்றனர். தீவிரவாத தாக்குதல்களால் ஈராக் நாடு கடுமையான பதற்றத்தில் இருப்பதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக வர்த்தக போக்குவரத்து துறைகள் மூலம் அந்த நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் அது மிகவும் பாதுகாப்பானது என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை இந்தியாவில் இருந்து யாரும் ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் மத்திய வெளியுறவுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈராக்கில் ஆயுதப்போர் நடைபெற்று வரும் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் முடிந்தவரை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும், வீடுகளுக்கு உள்ளேயே பாதுகாப்பாக தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து ஆவணங்கள் மற்ற பிற உதவிகள் தேவைப்பட்டால் பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்காக பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஈராக் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அல்லது இந்தியாவில் உள்ள அவர்களுடைய உறவினர்கள், ஏதேனும் தகவல் அல்லது உதவி தேவைப்பட்டால் இந்த உதவி மையத்தை amb.baghdad@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, +964 7704444899, +964 7704843247 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.