கென்யாவில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காத 48 பேரை சரமாரியாக சுட்டுக்கொன்றனர்.
சோமாலியாவில் முஸ்லிம் சட்டத்தை நடைமுறைபடுத்த கோரி அல் கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களை கட்டுப்படுத்த ஆப்ரிக்க யூனியனை சேர்ந்த படையினர் அங்கு முகாமிட்டு அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இந்த ஆபரேஷனில் அண்டை நாடான கென்யா படையினரும் பங்கேற்றுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்துள்ள சோமாலிய தீவிரவாதிகள் கென்யாவை பழிவாங்கும் வகையில் கண்மூடித்தனமாக பொதுமக்களை கொன்று வருகின்றனர். அந்த வகையில், நேற்று இரவு லாமு மாவட்டத்தின் கடலோர நகரமான பெகிடோனியில் பொதுமக்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை உற்சாகமாக பார்த்துக்கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். ஒரு ஓட்டலுக்குப் புகுந்து ஆண்களை மட்டும் தனியாகப் பிரித்து சுட்டுக்கொன்றுள்ளனர்.
இன்று அதிகாலை வரை நீடித்த இந்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். கார்கள் மற்றும் இரண்டு ஓட்டல்களுக்கும் தீவிரவாதிகள் தீ வைத்தனர்.
குறிப்பாக இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காததாலும், சோமாலி மொழி தெரியாததாலும் பலர் கொல்லப்பட்டதாக அதிகாரிகளும், நேரில் பார்த்தவர்களும் கூறுகின்றனர்.
“எங்கள் வீட்டிற்கு இரவு 8 மணிக்கு வந்த தீவிரவாதிகள் எங்களிடம் நீங்கள் முஸ்லிம்களா? என்று கேட்டனர். இல்லை என்று என் கணவர் கூறியதால், அவரது தலையிலும் மார்பிலும் சுட்டுக்கொன்றனர்” என்று அன்னாள் காதிகி என்ற பெண் தெரிவித்தார்.