இராக்கில் 40 இந்தியர்கள் கடத்தல்: கண்டுபிடித்து மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி


      இராக்கில் ஐஎஸ்ஐஎல் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள மொசூல் நகரில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 40 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.


இராக்கில் கிழக்கு பாக்தாத் பகுதியில் உள்ள கமாலியா நகரில் புதன்கிழமை ஆயுதங்களுடன் திரண்டுவந்து ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகளுக்கு எதிராக முழக்கமிடும் ஷியா பிரிவு போராளிகள்.


அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர்களது கதி என்னவாயிற்று என்று இதுவரை தகவல் இல்லை. இந்நிலையில், அவர்களது இருப்பிடத்தைக் கண்டறிந்து மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
கடத்தப்பட்ட அனைவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவோ, அல்லது பிற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தில்லியில் புதன்கிழமை கூறியதாவது:
இராக்கில் தாரிக் நுர் அல்ஹுதா நிறுவனத்தில் பணிபுரியும் 40 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
எனினும், அவர்கள் எங்கு கடத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தோ, அல்லது பணயத்தொகை கேட்டோ யாரிடமிருந்தும் எந்த அழைப்பும் வரவில்லை.
இது தொடர்பாக இராக்கிலுள்ள ஐ.நா. குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் தொடர்ந்து பேசி, கடத்தல் குறித்து தகவல்களைத் திரட்டி வருகிறோம்.
40 இந்தியர்களும் பணியாற்றி வந்த நிறுவனத்துடனும், அவர்கள் கடத்தப்பட்டுள்ளதை உறுதி செய்த சர்வதேச செம்பிறைச் சங்கத்துடனும் இணைந்து அவர்களது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
எனினும், அவர்களைக் கடத்தியது யார்? அவர்கள் எங்கு கடத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்? என்பவை குறித்து இதுவரை தகவல் இல்லை என்று அக்பருதீன் கூறினார்.

அமெரிக்க உதவி?: "கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க அமெரிக்க உதவி கோரப்படுமா?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ""இதுபோன்ற இக்கட்டான சூழலில், இதுபோன்ற அதிமுக்கியமான விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாது'' என்று பதிலளித்தார்.
செவிலியர்கள்: அவர் மேலும் கூறுகையில், ""ஐஎஸ்ஐஎல் தீவிரவாதிகளின் பிடியிலுள்ள திக்ரித் நகரில் இருக்கும் 46 செவிலியர்களுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.
அவர்களது பாதுகாப்பு குறித்து எங்களது அவசரகாலத் திட்டமிடல் குழு ஆராய்ந்து வருகிறது.
நிலவரத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இராக் யுத்தகளத்தில் சிக்கியுள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் உதவ, எந்தவொரு வாய்ப்பையும் மத்திய அரசு தவறவிடாது'' என்றார்.
தற்போது இராக்கில் 10 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிரவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரேஷ் ரெட்டி: முன்னதாக, இராக்கிலுள்ள இந்திய தூதரகப் பணிகளுக்கு வலு சேர்ப்பதற்காக, அந்நாட்டுக்கான முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டியை பாக்தாத் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
"60 வெளிநாட்டவர்கள் கடத்தல்': இதற்கிடையே இராக்கின் கிர்குக் நகரில், மருத்துவமனை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 60 வெளிநாட்டவர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் இராக்கில் உள்ள துருக்கி தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த வாரம் தீவிரவாதிகள் கைப்பற்றிய மொசூல் நகரில் துருக்கிய தூதரக அலுவலகத்தில் பணியாற்றிய 49 பேரையும், துருக்கியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 31 பேரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர்.
தீவிரவாதிகளின் கொடூரம்:மேலும், தீவிரவாதிகளிடம் திக்ரித் நகரம் வீழ்ந்த பிறகு, அங்கு அவர்களிடம் பிடிபட்ட இராக் வீரர்களை படுகொலை செய்வது போன்ற கொடூரமான படங்களை, தீவிரவாதிகள் அண்மையில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னேறும் தீவிரவாதிகள்: இராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த "இராக் மற்றும் லெவான்ட் இஸ்லாமிய தேசம்' (ஐஎஸ்ஐஎல்) தீவிரவாத இயக்கம், இம்மாதம் 9-ஆம் தேதி திடீரென்று தொடங்கிய அதிரடி தாக்குதல் மூலம் இராக்கின் மொசூல், திக்ரித் ஆகிய நகரங்களையும், பாக்தாதின் வட எல்லைப் பகுதிகளையும் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து படிப்படியாக முன்னேறி, திங்கள்கிழமை அதிகாலை ஷியா பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட, சுமார் 2 லட்சம் பேர் வசிக்கும் அல்-அஃபார் நகரின் பெரும்பகுதியை தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
இதனையடுத்து, இராக் நாடு அபாயத்தின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.