ஒபாமாவுடன் லிப்டில் சென்று வேலையை பறிகொடுத்த பாதுகாவலர்

 ஒபாமாவுடன் லிப்டில் சென்று வேலையை பறிகொடுத்த பாதுகாவலர்பாரக் ஒபாமா எபோலா தொற்று குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திற்கு வந்துள்ளார். ஒபாமாவை லிப்டில் அழைத்து செல்லவும், மரியாதை நிமித்தமாக அவருடன் செல்லவும் அங்கு பாதுகாப்பாளராக பணிபுரிந்த கென்னெத் டேட் எனும் 47 வயது நபர் நியமிக்கப்பட்டார்.

ஒபாமாவுடன் தனக்கு நியமிக்கப்பட்ட பணியை சரியாக செய்து முடித்த டேட்டிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திற்கு ஒபாமா வந்து சென்ற சில நாட்களில் டேட்டிற்கு வேலை பறிபோனது. டேட் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதற்கு, அவர் ஒபாமாவுடன் லிப்டில் சென்றபோது துப்பாக்கி வைத்திருந்ததும், ஒபாமா அங்கிருந்து புறப்பட்டபோது அவரது வாகனத்தை புகைப்படம் எடுத்ததும் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த டேட், ”நான் அன்று எப்போதும் போல எனது பாதுகாவலர் பணியை பார்த்து வந்தேன். என்னிடம் துப்பாக்கி இருந்தது. அப்போது நான் ஒபாமாவுடன் சென்று, அவருக்கு லிப்ட் ஆப்பரேட் செய்ய வேண்டும் எனக் கூறினர். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

லிப்டில் ஒபாமா என் பெயரை கேட்டார். அவரிடம் எனது பெயரை சொன்னேன். அவர் என்னுடன் கை குலுக்கினார். எனக்கு இது ஒரு பெரிய சாதனையாக இருந்தது. அவர் புறப்படும் போது அவரது காரை எனது மொபைலில் படம் எடுத்தேன். ஒபாமாவின் ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் என்னை அழைத்து சென்று மொபைலில் இருந்த படத்தை அழிக்க சொன்னார்கள். மேலும், ஒபாமாவுடன் சென்றபோது என்னிடம் துப்பாக்கி இருந்ததையும் அவர்கள் தவறு என கூறினர்.” எனத் தெரிவித்தார்.