கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய ‘காதல் முத்தம்’ வலைத்தளம் முடக்கம்

 
கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்று, ஒழுக்கக்கேடான செயல்களை ஊக்குவிப்பதாக கூறி பாஜக இளைஞரணி தொண்டர்கள் அந்த ஹோட்டலை சூறையாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் பசுபாலன் என்பவர் தலைமையில் சிலர், நேற்று முன்தினம் ‘காதல் முத்தம்’ என்ற பெயரில் கொச்சியில் நூதன போராட்டம் நடத்த முயன்றனர்.
 
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும் சம்பவத்தின் போது தடியடியும் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்த போராட்டத்துக்காக ஆதரவு திரட்டப்பட்ட பேஸ்புக் வலைத்தளம் நேற்று திடீரென முடக்கப்பட்டது. இதனால் அதன் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன் நேற்று மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவை சந்தித்து புகார் அளித்தார்.
 
பின்னர் இது குறித்து அவர் கூறும்போது, ‘எங்கள் வலைத்தளம் முடக்கப்பட்டதன் பின்னணியில், எங்களுக்கு எதிரான ஆன்லைன் குழுவினர் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அவர்கள் எங்கள் இயக்க பெண் மெம்பர்களை ஆபாசமாக சித்தரித்து போஸ்டர்களை போட்டு வருகின்றனர்’ என்றார். மேலும் விரைவில் புதிய தளம் ஒன்றை உருவாக்கப்போவதாகவும் அவர் கூறினார்.