ஓஹியோவில் பயங்கரம் : 3 வயது தங்கையை சுட்ட 4 வயது சிறுவன்



ஓஹியோவில் வீட்டில் இருந்த துப்பாக்கியால் விளையாட்டுத் தனமாக தனது 3 வயது தங்கையின் தலையில் 4 வயது சிறுவன் சுட்டதில், சிறுமி படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லோரெய்ன் பகுதியில் ஓஹியோ என்ற இடத்தில் அந்நாட்டு நேரப்படி இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்துள்ளது.
தனது வீட்டின் படுக்கையறையில் கிடந்த 40-காலிபர் கைத்துப்பாக்கியைக் கொண்டு விளையாட்டுக்காக சிறுவன் தனது தங்கையைப் பார்த்து சுட்டுள்ளான். எதிர்பாராதவிதமாக அது வெடித்து சிறுமியின் தலையில் குண்டு பாய்ந்தது. உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் மன அளவில் பாதிக்கப்பட்ட சிறுவன், தொடர்ந்து என்னை மன்னித்து விடுங்கள் மன்னித்து விடுங்கள் என்று கூறி அழுதவாறு இருந்துள்ளான்.
இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.