மராட்டிய சட்டமன்ற தேர்தல் : காங்கிரஸ் கட்சியின் ரூ.10 கோடி மாயம்



மராட்டியத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 288 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்ய ஒரு தொகையை காங்கிரஸ் மேலிடம் அனுப்பி வைத்தது. இந்த பணம் பல பகுதிகளுக்கும் பிரித்து எடுத்து செல்லப்பட்டன.

இதில் பிரபாதேவி பிளாட் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்ட ரூ.10 கோடி பணம் திடீரென்று மாயமாகி விட்டது. இந்த தகவலை அறிந்ததும் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்தது.

ரூ.10 கோடி பணம் மாயமானதால் காங்கிரஸ் மேலிடம் கொடுத்து அனுப்பிய பணம் 137 வேட்பாளர்களுக்கு மட்டுமே கிடைத்தது. மீதமுள்ள வேட்பாளர்களுக்கு பணம் கிடைக்க வில்லை. இதனால் தேர்தல் பிரசாரத்தின்போது பணம் கிடைக்காத வேட்பாளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.

பணம் மாயமான தகவலை முன்னாள் முதல்வர் பிருதிவிராஜ் சவான், மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கராவ் தாக்கரே ஆகியோர் கட்சி மேலிடத்துக்கு தெரியப்படுத்தினார்கள்.

கட்சி மேலிடத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பணம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வழங்குவதற்காக ஒவ்வொரு பகுதியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதிக்கு அனுப்பப்பட்ட பணம் மட்டும் மாயமாகி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அந்த பணம் எப்படி மாயமானது. அதை யார் எடுத்துச் சென்றார்கள் என்ற விவரம் தெரிய வில்லை. பணத்தை பிரித்து வழங்குவதற்கான பொறுப்பு 2 அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர்களாலும் பணத்தை யார் எடுத்துச் சென்றார்கள் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை.

ரூ.10 கோடி பணம் மாயமானது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்படவில்லை. மாயமான ரூ.10 கோடியை எடுத்துச் சென்றது யார் என்று காங்கிரஸ் கட்சி மேலிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறது.