பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் பதவி பறிப்பு... ஒரு விறுவிறு "பிளாஷ்பேக்"!

ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிப்பு பரபரப்பு இன்றும் கூட மக்கள் மனதில் பரபரப்பாக நிழலாடிக் கொண்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்குத் தண்டனை கிடைத்து அவரது பதவிக்கு ஆபத்து வருமா என்ற தற்போதைய பரபரப்புக்கு மத்தியில், ஜெயலலிதாவுக்கு 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த சோதனை குறித்த பிளாஷ்பேக்கை இப்போது பார்க்கலாம். ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சியின்போது நடந்த பல்வேறு ஊழல்கள், முறைகேடுகளின் அடிப்படையில் அடுத்து வந்த திமுக ஆட்சியில் சரமாரியாக வழக்குகள் பாய்ந்தன. அதில் ஒன்றுதான் டான்சி நிலத்தை அதிகார துஷ்பிரயோகமாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரைப் பார்ட்னர்களாகக் கொண்ட ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம் விலைக்கு வாங்கிய விவகாரம். அரசுக்குச் சொந்தமான இந்த நிலத்தைக் குறைந்த விலைக்குவாங்கியதால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதைக் காரணம் காட்டி சிபிசிஐடி போலீஸார் ஜெயலலிதா, சசிகலா, முன்னாள் அமைச்சர் முகம்மது ஆசிப், ஐ.ஏ.எஸ்.அதிகாரி கற்பூர சுந்தர பாண்டியன், டான்சி நிறுவன தலைவர் சீனிவாசன் மற்றும் அதிகாரி நாகராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை சென்னை 3 வது தனிநீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.