உலகிலேயே 63 வார்த்தைகள் கொண்ட நீண்ட பெயரை உடைய ஸ்வீடிஷ் மனிதர்

உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இதுநாள் வரை 29 வார்த்தைகள் கொண்ட எடின்பரோவைச் சேர்ந்த ஒருவரது பெயரே(வாழும் நபர்) மிக நீண்டது என்ற சாதனையைப் பெற்றிருந்தது. ஆனால் இப்போது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரின் பெயர் இந்த சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 63 வார்த்தைகள் கொண்ட அவரது பெயர் பின்வருமாறு;

கிம் ஜோங் செக்சி குளோரியஸ் பீஸ்ட் டிவைன் டிக் பாதர் லவ்லி அயர்ன் மேன் யூனிக் பொ உன் வின் சார்லி கோரா கவோஸ் மெஹன் ஹன்சா கிம்மி ஹம்பெரோ யூனோ மாஸ்டர் ஓவர் டான்ஸ் ஷேக் பவுடி பெபோப் ராக்ஸ்டெடி ஷ்ரெட்டர் குங் உல்ப் ரோட் ஹவுஸ் கில்காமெஷ் பிளாப் கைய் தியோ இம் யோடா பங்கி பாய் ஸ்லாம் டக் சுக் ஜோர்மா சுக்கா பெக்கா ரயான் சூப்பர் ஏர் ஊய் ருஸ்ஸல் சல்வடார் அல்போன்ஸ் மொல்கன் அக்டா பப்பா லாங் நமே எக்.

பப்பா லாங் நமே எக் என்று அழைக்கப்படும் இவர் தற்போது மிக நீளமான பெயருடையவர் என்ற சாதனையை செய்துள்ளார். ஸ்டாக்ஹோம் அருகே உள்ள ஹனிங்கே என்ற நகரைச் சேர்ந்த இவர் அலெக்சாண்டர் எக் என்ற தனது பெயரைப் பதினெட்டு வயதிலிருந்து மாற்றி வந்துள்ளார். சுவீடனில் ஒரு நபர் தனது பெயரைக் கட்டணமின்றி ஒரு முறை மாற்றிக்கொள்ளமுடியும். அதன்பின் ஒவ்வொருமுறையும் பெயர் மாற்றக் கட்டணமாக 149 அமெரிக்க டாலர்களைச் செலுத்தவேண்டும்.

அலெக்சாண்டர் இதுவரை ஆறு முறை பெயரை மாற்றியுள்ளார். ஒவ்வொருமுறையும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளுடன் தற்போது மொத்தம் 63 வார்த்தைகள் அவரது பெயருடன் இணைந்துள்ளது. அவருக்கு வரும் கடிதங்களோ, மின்சாரக் கட்டணத் தகவல்களோ தாமதமாகவே வரும் என்று கூறும் இவர் ஒருமுறை உசாமா பின் எக் என்ற பெயரில் தனக்கு வந்த கடிதத்தைப் பார்த்து பெற்றோர்களே குழம்பிப் போனார்கள் என்று குறிப்பிட்டார்.